சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த இரண்டு தமிழர்கள், பாலியல் தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்திற்காக இருவருக்கும் 5 ஆண்டுகள் ஒரு மாத சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
அரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் 24 அன்று சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றனர். சிங்கப்பூர் வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, ஒரு அந்நியர் இவர்களை அணுகி பாலியல் சேவைக்கு விருப்பமா என்று கேட்டிருக்கிறார். இவர்களும் ஓகே சொல்ல, அந்த நபர் இரண்டு பெண்களின் தொடர்பு விவரங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அன்று மாலை 6 மணியளவில் ஒரு பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்தனர். அறைக்குள் வந்ததும் அப்பெண்ணின் கைகள் மற்றும் கால்களைத் துணிகளால் கட்டி, கன்னத்தில் அறைந்துள்ளனர். அவரிடமிருந்த நகைகள், 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், அவரது பாஸ்போர்ட் மற்றும் வங்கி அட்டைகள் ஆகியவற்றை அரோக்கியசாமியும், ராஜேந்திரனும் கொள்ளையடித்துள்ளனர்.
அன்று இரவு 11 மணியளவில், மற்றொரு ஹோட்டலில் இரண்டாவது பெண்ணைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அவர் வந்ததும், அவரை அறைகளுக்குள் இழுத்துச் சென்று அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். அப்பெண் சத்தம்போடாமல் இருக்க, ராஜேந்திரன் அவரது வாயைப் பொத்தியுள்ளார். இந்த பெண்ணிடமிருந்து அவர்களிடமிருந்து 800 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் அவரது பாஸ்போர்ட் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். திரும்பி வரும் வரை அறையை விட்டு வெளியேறக் கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர்.கடந்த 12 மணி நேரமாக ஓட்டல் ரூம் திறக்கப்படாமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள், அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு இளம்பெண் கைகள் கட்டப்பட்டு வாய் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண் மீட்டகப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவத்தை பெண் கூற அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான இருவரும், நீதிமன்றத்தில் கருணை கோரி, குறைவான தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் மன்றாடினர். ஆரோக்கியசாமி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம், “என் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள், ஒருவர் திருமணம் ஆனவர். எங்களிடம் பணமில்லை. அதனால்தான் இதைச் செய்தோம்” என்றார்.
ராஜேந்திரன், “என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாக இருக்கிறார்கள், அவர்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள்” என்று கூறினார். சிங்கப்பூர் சட்டத்தின்படி, கொள்ளையின்போது காயம் ஏற்படுத்துபவர்களுக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். இதனையடுத்து இருவருக்கும் 5 ஆண்டுகள் ஒரு மாத சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.