டேராடூன்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் உஷார் நிலையில் இருக்கும் சூழலில், மீண்டும் அதிகளவில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள அரசுப் பள்ளியில் சுமார் 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுக்க போலீசார் உஷார் நிலையில், இதற்கிடையே மீண்டும் வட இந்தியாவில் அதிகளவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள அல்மோரா என்ற பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜெலட்டின் குச்சிகள் சக்திவாய்ந்த வெடிபொருட்களாகக் கருதப்படும் நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அளித்த தகவலின் பேரிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்குக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்றைக் கண்டதாகச் சொல்லி அவர் தான் முதலில் போலீசாருக்குத் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் அங்கு வந்து முழுமையான சோதனை நடத்தினர். அப்போது தான் அங்கு ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த மற்ற மாதிரிகளையும் சேகரித்தனர்.
இது தொடர்பாக இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வகுவதாக அல்மோரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரா பிஞ்சா தெரிவித்தார். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை விசாரணை முடிந்த பிறகு நாங்களே வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், “தப்ரா கிராமத்தில் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் சுமார் 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்ளூர் போலீசார் முதலில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்றனர்.. அவர்கள் விசாரணை நடத்தி அப்பகுதியைச் சோதனையிட்டனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.பொதுவாக சாலை கட்டுமானப் பணிகளின் போது பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்படும். அந்தளவுக்கு வலிமையான வெடிகுண்டுகள் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்தும் எதற்காக இதை அங்கு வைத்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கு அருகே 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரத்திலேயே செங்கோட்டைக் குண்டுவெடிப்பும் நடந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உஷாராக இருக்கும் சூழலில், இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பொறுத்தவரை மருத்துவர் உமர் நபி என்பவர் குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர் தான் வெடித்துச் சிதறி காரை ஓட்டி வந்தார். மேலும், இருவரை போலீசார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.
