24 in Thiruvananthapuram

கிரீன் கார்டு vs கோல்டு அட்டை.. அமெரிக்க குடியுரிமையை விற்கும் டிரம்ப்! இந்தியர்களுக்கு சிக்கல்

Posted by: TV Next February 27, 2025 No Comments

நியூயார்க்: அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் எனில், வர்த்தகம் மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், இப்போது இதற்கு பதிலாக கோல்டு அட்டை (Gold Card) எனும் புதிய திட்டத்தை டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேற நினைப்பவர்களுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது.

சிம்பிளாக சொல்வதெனில் ரூ.43 கோடியை செலுத்தினால் உங்களுக்கு கோல்டு அட்டையும், அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும். ஆனால் இந்தியர்களால் இவ்வளவு செலுத்த முடியுமா? என்பது கேள்விக்குறி.

அமெரிக்காவில் குடியேற வேண்டும் என விரும்புபவர்களுக்கு, EB-5 புலம்பெயர்ந்த முதலீட்டாளர் விசா திட்டம் மூலம் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியது. அதாவது நீங்கள் ரூ.1 கோடி அளவுக்கு முதலீடு செய்து, குறைந்தபட்சம் 10 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்தால் போதும். உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை கன்பார்ம். ஆனால், இப்போது இந்த EB-5 திட்டத்திற்கு பதில், கோல்டு அட்டை எனும் திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேற விரும்புவோர், ரூ.43 கோடி செலுத்தி கோல்டு அட்டையை வாங்கிக்கொள்ள வேண்டும். இதை பெற்றால் நீங்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றவர் என்று அர்த்தம். விஷயம் என்னவெனில், ரூ.1 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் EB-5 திட்டத்தின் மூலம் கடந்த 2023ம் ஆண்டு வெறும் 631 இந்தியர்கள்தான் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்தனர்.

இதுவே இந்த முதலீடு ரூ.43 கோடியாக உயர்த்தப்பட்டால், அமெரிக்காவில் இந்தியர்கள் குடியுரிமை பெறுவது அப்படியே சரிந்துவிடும். ஆக வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களை விடவும் இந்தியர்களுக்குதான் இது சிக்கல்.

மட்டுமல்லாது அமெரிக்க மக்களிடையேயும் இந்த திட்டம் குறித்து கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அமெரிக்க குடியுரிமையை வெறும் ரூ.43 கோடிக்கு விற்க முடியுமா? பணத்தால் குடியுரிமை பெறுபவர்கள் இங்கே வந்து என்ன செய்வார்கள்? அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்களா? ஏற்கெனவே இருந்த EB-5, அமெரிக்கர்களுக்கு ஓரளவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வந்தது. அதையும் கோல்டு அட்டை திட்டம் மூலம் டிரம்ப் இல்லாமல் செய்ய பார்க்கிறார் என்று பஞ்சாயத்துகள் கிளம்பியுள்ளன. மட்டுமல்லாது ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் (Russian oligarchs) அமெரிக்காவை ஆக்கிரமிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் அச்சம் தெரிவித்திருக்கின்றன. 1990களில் சோவியத் உடைந்தபோது, நாட்டின் பெரும் செல்வங்களை பல பணக்காரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கைப்பற்றினர். குறிப்பாக எரிசக்தி, கனிம வளங்கள், வங்கிகள், ஊடகம் ஆகியவை முக்கிய நபர்களால் கைப்பற்றப்பட்டது. உக்ரைன் போர் காரணமாக இவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிரம்ப்பின் கோல்டு அட்டை திட்டத்தின் மூலம் இவர்களுக்கான கதவு அமெரிக்காவில் திறக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய பணக்காரர்களில் சிலர் நல்லவர்கள் என்றும் கூட டிரம்ப் பேசியிருக்கிறார். ஆக இதெல்லாம் அமெரிக்காவில் புது சலசலப்பை கிளப்பியுள்ளது.

மறுபுறம் இதில் சில சட்ட சிக்கல்களும் இருக்கின்றன. ஏற்கெனவே டிரம்ப் கொண்டுவந்த பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை மறுக்கும் சட்டத்திற்கு பல நீதிமன்றங்கள் தடையை பிறப்பித்திருக்கின்றன. அதேபோல இந்த திட்டத்திற்கும் நீதிமன்றங்கள் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. மட்டுமல்லாது கோல்டு அட்டை திட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு ஆளும் கட்சியின் எம்பிக்களே எதிராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.