வாஷிங்டன்: 2019ல் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். அப்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தத. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை வீழ்த்தும் வகையில் அவர்களின் பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பணியை அமெரிக்க ஏஜென்சி செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரி மைக் பென்ஸ் பரபரப்பான கதவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்பது USAID(United States Agency for International Development) ஏஜென்சி மூடியது தான்.இந்த ஏஜென்சி அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் கீழ் சுதந்திரமாக இயங்கிய வந்தது. வெளிநாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க தேவையான நிதியை வழங்குவதோடு, தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி வழங்கி வந்தது. இந்த ஏஜென்சி பணத்தை தவறான செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்குவதை DOGE தலைவர் எலான் ஸமஸ்க் உதவியுடன் கண்டுபிடித்த டிரம்ப் தற்போது அந்த ஏஜென்சியை முடக்கி உள்ளார். 90 நாட்களுக்கு தற்காலிகமாக அந்த ஏஜென்சி மூடப்பட்டுள்ளது. அதன் மூலம் வழங்கப்பட்ட நிதி மற்றும் திட்ட பணிகளை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது USAID அமைப்பு குறித்த திடுக்கிட வைக்கும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த ஏஜென்சி இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மட்டுமின்றி, ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்பு, தாலிபான்கள் காண்டம் வாங்கவும் நிதி ஒதுக்கி உள்ளது தெரியவந்துள்ளது
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் விஷயத்தில் இந்த ஏஜென்சி தலையீட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மைக் பென்ஸ் பரபரப்பான கருத்துகளை கூறியுள்ளார். மைக் பென்ஸ் யார் என்றால் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரி ஆவார். இந்த மைக் பென்ஸ்சர்வதேச கம்யூனிகேஷன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை உதவி செயலாளராக கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பணியாற்றி இருந்தார்.
இவரது பணி என்னவென்றால் சைபர் விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பது மற்றும் பிற பெரிய நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்படுவது என்பதாகும். இந்த பணிக்கு முன்பாக அவர் அமெரிக்க வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புக்கு Speech Writer ஆகவும், தொழில்நுட்பம் சார்ந்த அட்வைசராகவும் பணியாற்றினார். தற்போது மைக் பென்ஸ் பவுண்டேஷன் ஆஃப் ப்ரீடம் ஆன்லைன் என்ற லாப நோக்கமற்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இதுபற்றி மைக் பென்ஸ் கூறியதாவது: ஊடக செல்வாக்கு, சமூக ஊடக தணிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு நிதியளித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் பல்வேறு நாடுகளின் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கையில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. அமெரிக்கா ஆதரவு பெற்ற நிறுவனங்கள் மற்றும் நிதி பெறும் நிறுவனங்கள் பிற நாடுகளை அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படும் வகையிலான பணிகளை பிற நாடுகளில் ஒருங்கிணைத்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் செயல்படும் ஏஜென்சிகளான USAID, Think Tanks உள்பட முன்னணி டெக்னாலஜி நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆன்லைன் பிரசாரத்தை கையில் எடுத்தன. மோடியின் ஆதரவாளர்கள் ஆன்லைனில் தவறான தகவல்கள் பரப்புவது போன்ற நிலை உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மோடியின் அரசியல் வெற்றி என்பது தவறான தகவல்களால் தான் கிடைத்தது என்பது போன்று பரப்பப்ட்டு பிரசாரம் செய்யப்பட்டது.
இதற்காக சர்வதேச ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளை வெளியிட்டு இந்தியாவில் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்பப்படுகிறது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஏஜென்சிகள் அதன் உண்மை தன்மையை ஆராயும் வகையில் உள்ளே நுழைந்தன. இது சமூக வலைதளங்களில் மோடிக்கு ஆதரவான கருத்துகளை கட்டுப்படுத்த வழிவகை செய்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் என்பது பேஸ்புக், வாட்ஸ்அப், யுடியூப், எக்ஸ் நிறுவனங்களில் செல்வாக்குடன் இருந்தது தான். இந்தியாவை பொறுத்தவரை அதிகமாக வாட்ஸ்அப்பில் தான் அரசியல் சார்ந்த செய்திகள் பகிரப்படுகின்றன. இதனால் அந்த செய்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் இலக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக அட்லாண்டிக் கவுன்சில், குளோபல் என்கேஜ்மென்ட் சென்டர் (Global engagement Center)உள்ளிட்ட அமைப்புகளும் தவறான தகவல்களை தடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் மோடிக்கு ஆதரவான கருத்துகளை குறைப்பது தான் நோக்கமாக இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தான் இருந்தார். டொனால்ட் டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு என்பது உள்ளது. ஆனால் மோடிக்கு எதிராக செயல்பட்ட அமெரிக்காவின் அமைப்புகள் என்பது நாட்டின் வெளியுறவுத்துறையின் கீழ் இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட கூடியவையாக இருந்தன. மேலும் சைபர் துறை சார்ந்த கொள்கைகளை மேற்பார்வையிடுபவர்கள் உட்பட வெளியுறவு துறைக்குள் இருந்த சக்திபடைத்த நபர்கள் அந்த வேலைகளை செய்தனர்” என்று கூறியுள்ளார். இது தற்போது விவாதமாகி உள்ளது. இந்தியா மட்டுமின்றி வங்கதேசத்தில் ேஷக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா ஏஜென்சிகள் செயல்பட்டதாக மைக் பென்ஸ் குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.