சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த பல்லாவரம், இன்று தாம்பரம் மாநகராட்சியின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. சென்னைக்குள் இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் தான் வருகிறது. இங்குள்ள அரசு நிலங்கள் பராமரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு உள்பட நிர்வாக ரீதியாக அனைத்து பணிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இருக்கிறது.
கிண்டியை தாண்டி உள்ள பரங்கிமலையே செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது. அந்த வகையில் பல்லாவரம் பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்த காரணத்தால் ஆக்கிரமிப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் பல்லாவரம் 13-வது வார்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எஸ்.பி.காந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், ‘பல்லாவரம் ரயில்நிலையம் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஏரியின் அருகே ரூ.1¼ கோடி செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. ஆனால் பல்லாவரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றாமல் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் அது எந்தவகையிலும் மக்களுக்கு பயன் இல்லாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல் மழை நீர் கட்டமைப்புக்காக செலவிடப்படும் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிவிடும். எனவே, பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘சென்னை பல்லாவரம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் இந்த பணி அடுத்த 4 மாதத்துக்குள் முடிந்து விடும்.
எனவே இந்த பணி முடிந்ததும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு உறுதி அளித்தார். செங்கல்பட்டு கலெக்டரின் பதில் மனுவை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். More From OneIndia