விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி என்றும் தலித்துகளிடம் எஸ்சி தானே என்று அவமரியாதையாக பேசியவர் என திருக்கோவிலூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நேற்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், சங்ககாலத்தில் மலையமான் மன்னர்களின் தலைமையகமாக, சங்க பெரும்புலவர் கபிலர் அவர்களின் பெயரில் தமிழகத்தின் ஜீவ நதிகளில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றங்கரையில் “கபிலக்கல்” என்ற கபிலர் குன்று அமைந்துள்ள திருநீறு நெறியைக் காப்பதற்காகவும், துறவிகளின் மேன்மையையும், சிவபக்தி உண்மையையும் நிலைநிறுத்த தன் உயிரையே கொடுத்த மெய்பொருள் நாயன்மார் அரசாண்ட திருக்கோவிலூர் மண்ணில், பெரும் எழுச்சியுடன் திரளெனக் கூடிய மக்களின் ஆரவாரத்தால் சிறப்புற்றது.
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறையில்லாத அமைச்சர் செய்த சாதனைகள், பெண்களை ஓசி என்று திட்டியது, பட்டியல் மக்களை நீ SC தானே என்று பொதுமேடையில் அவமதித்தது, அப்படியே வாக்களித்து கிழிச்சுடீங்க என்று வாக்காளர்களை அசிங்கப்படுத்தியது, ஏ போயா என்று ஆளுநரை அவமரியாதையாகப் சட்டமன்றத்தில் பேசியது, யோவ் சும்மா உக்காருய்யா என்று எதிர்கட்சியினரை பார்த்து கத்தியது. இவைதான் அவரின் பெருமை பேசும் சாதனைகள். ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பின்னர், உடல் நலம் சரியில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறி, சிறைக்குச் செல்வதை தள்ளி வைத்துவிட்டு, உதயநிதி வாழ்க என்று சேலம் மாநாட்டுக்கு நடந்த பேரணியில் கோஷமிட்டுச் செல்கிறார்.
பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், முறைகேடாக உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள், ₹81.7 லட்சம் ரொக்கம் மற்றும் ₹13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகள், ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளன, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. வெறும் ₹41.57 லட்சத்திற்கு ஒரு நிறுவனத்தை வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்றதில் ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது தான் துறையில்லாத அமைச்சரான பொன்முடியின் லட்சணம்.
சாதாரண மூட்டை தூக்கும் தொழிலாளிக்குக் கூட குறைந்தபட்ச தகுதி எதிர்பார்க்கும் நாம், நம்மை ஆளும் அரசியல்வாதிகளிடம் ஏன் அந்தத் தகுதியை எதிர்பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தில் பிறந்த தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு, மக்கள் பணத்தைத் திருடி ஊழல் செய்து அவர்கள் குடும்பம் மட்டுமே நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்களே தவிர, தமிழக இளைஞர்களுக்கு மகளிர் மேம்பாடுக்கென வேலைவாய்ப்போ, புதிய திட்டங்களோ இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கொண்டு வரவில்லை. மாற்றி மாற்றி வாக்களித்து மக்கள் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஒருவரை விட ஒருவர் அதிக ஊழல் செய்து, இறுதியில் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள்தான். வரும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான முதற்படி. ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த அரசியல் தமிழகத்திலும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் மக்களிடம் உணர முடிகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி, தமிழக மக்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், நேர்மையின் பக்கம் நின்று, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.