சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ” ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை – கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்து இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரினார்.
கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தோடு தன்னை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்தார்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது. கோடநாடு சம்பவத்தின் போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடநாடு வழக்குக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது என உதயநிதி ஸ்டாலின் தனது மனுவில் கூறியுள்ளார். பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.