31 in Thiruvananthapuram

தடிக்கும் வார்த்தை.. வலுக்கும் மோதல்! நாம் தமிழரை விடாத வருண்குமார்! நேராக உள்துறைக்கே பறந்த புகார்!

Posted by: TV Next December 9, 2024 No Comments

சென்னை: சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்பி அருண்குமார் பேசிய பேச்சு, நாம் தமிழர் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக மோதல் விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் வலுத்திருக்குகிறது. இதற்கிடையே எஸ்பி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு தன்னை சித்திரவதை செய்ததாக துரைமுருகன் புகார் கூறியிருந்தார்.

 


மேலும் அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது. துரைமுருகனுடன் பேசிய சீமான், கட்சியின் நிர்வாகிகளான காளியம்மாள் நத்தம் சிவசங்கரன் உள்ளிட்ட மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது. அதனை சீமானும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

 

தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த அவர் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம்.. எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வருண்குமாருக்கு எதிரான சமூக வலைதள தாக்குதல்கள் தொடர்ந்தன. இதற்கு காரணமான சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். தொடர் கைது நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின், வருண் ஐபிஎஸ் மீதான தாக்குதல் குறைந்தது. தொடர்ந்து இருதரப்பும் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.


சண்டிகரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு மீண்டும் பிரச்சினையை கிளப்பி இருக்கிறது. இதில் பேசிய திருச்சி எஸ்பி வருண்குமார்,”சைபர் குற்றங்களால் தனது குடும்பம் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் அதற்கு நாம் தமிழர் கட்சி காரணம் என்றும் பிரிவினை வாதத்தை தூண்டும் அந்த கட்சியை கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சீமான்,” ரொம்ப நாளாகவே வருண்குமார் எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி. 13 ஆண்டுகளாக தனித்துப் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். எங்களை பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என எப்படி கூறலாம்? எத்தனை நாட்களுக்கு காக்கி உடையில் இருப்பார். பார்த்து பேச வேண்டும். மோதுவோம் என்றாகி விட்டால் வா மோதுவோம்” என சவால் விட்டார்.