சென்னை: ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்னோடியாக தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் இது என இந்த திட்டம் குறித்து அரசு பெருமிதம் தெரிவிக்கிறது.
தமிழக அரசு சார்பாக தற்போது இந்த திட்டத்தின் மூலம் 1 .16 கோடி பெண்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெறுகின்றனர். இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பம் செய்ய தவறியவர்கள் எப்போது மீண்டும் விண்ணப்ப அறிவிப்பு வரும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலையில் கூடிய விரைவில் மாவட்டம் தோறும் விடுபட்ட பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட பெண்களை அறிந்து அவர்களுக்கும் இதனை கிடைக்க வழிவகை செய்யும் படி கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ரீதியாக துறை சார்ந்தவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிகிறது. எனவே தகுதி இருந்தும் விண்ணப்பம் செய்ய தவறியவர்கள், புதிதாக ரேசன் அட்டை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தயாராக இருக்கவும். மகளிர் உரிமை தொகை திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பிரதான திட்டம் ஆகும். எனவே இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே தான் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இத்திட்டத்தை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநிலக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்து மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தளத்தில் குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, மேற்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம் அவர், செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.