சென்னை: எனது மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது என துரை வைகோ விளக்கமளித்துள்ளார். திராவிட இயக்கத்தை பின்பற்றும் வைகோ பேத்தியின் திருமண அழைப்பிதழில் குலம், கோத்திரத்துடன் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணனுக்கும் கடந்த 7ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முதல் நாளான 6ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்பி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழில் வைகோவின் ஜாதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது திராவிட இயக்கத்தைப் பின்பற்றி வரும் வைகோ வீட்டு திருமண அழைப்பிதழில் இது போல் குலம், கோத்திரம், நல்ல நேரம் எல்லாம் அச்சிட்டிருப்பதை பார்த்து பலருக்கு இது உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் கூட எழுந்தது. இந்த நிலையில்தான் தனது மகளின் திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன்’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் துரை வைகோ, தன் மகள் மற்றும் மணமகன் வீட்டாரின் விருப்பத்துக்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே தமிழ் மந்திரங்கள் வாசிக்கப் பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதாவது அந்த அழைப்பிதழில் கலிங்கப்பட்டி, புலிபாட்டி குலம், வல்லட்ட கோத்திரம் வைகோ- ரேணுகாதேவியின் மகன் வழி பெயர்த்தியும் வி.குருமப்பட்டி, எல்லேட்டிவார் குலம், ஈழமுக்குவ கோத்திரம் ஜெயவிஜயன்- ருக்மணி அம்மாள் அவர்களின் மகள் வழி பெயர்த்தியும் துரை வைகோ- கீதா தம்பதியின் குமாரத்தியுமான சவுபாக்யலட்சுமி டி. வானதசி ரேணுவுக்கும், விருதுநகர் சுக்கிரவார்பட்டி, பயிண்டி குலம், முத்தட்ல கோத்திரம், என குறிப்பிட்டு மணமகனின் பெயரும் இருந்தது.
திராவிட இயக்கத்தின் போர்வாள் என அழைக்கப்படும் வைகோவின் பேத்தி திருமணத்தில் மட்டும் இப்படி குறிப்பிட்டுள்ளாரே என விமர்சனம் எழுந்த நிலையில்தான் திருச்சி எம்பியும் அவருடைய மகனுமான துரை வைகோ கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார்.