சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்னும் 25 நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் முதல் மாநாட்டில் தனது ரசிகர் பலத்தை காட்ட பல திட்டங்களை தீட்டி இருக்கிறார் விஜய். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 6000 முதல் 10 ஆயிரம் பேர் வரை அழைத்து வர வேண்டுமென நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்து இருக்கிறது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். செந்தில் பாலாஜி விடுதலை, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி என ஆளுங்கட்சியான திமுக பரபரப்பில் இருக்கிறது.
மறுபுறம் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார். தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால் எடப்பாடி ஃபார் 2026 என்ற முழக்கத்துடன் அந்த அமைப்புடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை லண்டன் பயணத்தால் எச். ராஜா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை சுற்றி பல யூகங்கள் பரவி வருகிறது. இப்படியாக பல பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களத்தில் புதிய வரவாக பூத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது.
வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மாநாடு சுமார் ஒரு மாதம் தள்ளிப் போன நிலையில் தற்போது, 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இதை அடுத்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்கான பூமி பூஜை நடைபெற இருக்கும் நிலையில் தொண்டர்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வரக்கூடாது, காவலர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், சாலைகளில் சாகசம் செய்யக் கூடாது என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் எவ்வித பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் வரும் வாகனத்தின் பதிவு, இன்சூரன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் பனையூரில் குவிந்து வருகிறது. மேலும் தொண்டர்கள் சந்திக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள வழக்கறிஞர் பிரிவும் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தான் நடத்தும் முதல் மாநில மாநாட்டில் தனது முழு பலத்தை காட்ட விஜய் திட்டமிட்டு இருக்கிறார். மாநாட்டுக்கு 50,000 பேர் வருவார்கள் அவர்களுக்காக இருக்கை அமைக்கப்பட்டு இருக்கிறது என கூறினாலும், ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வரை திரட்ட வேண்டும் என்பதுதான் விஜயின் திட்டம்.
இதற்காகத்தான் மாவட்ட வாரியாக பொதுச் செயலாளர் ஆனந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 38 நிர்வாக மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 6000 பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை திரட்டி வரவேண்டும் என உத்தரவு பறந்திருக்கிறது. மாநாட்டுக்கான செலவுகள் அனைத்தையும் விஜய் பார்த்துக் கொள்கிறார். மற்ற கட்சிகளை போல நன்கொடை பெறுவது, உள்ளூர் தொழிலதிபர்களும் பணம் கேட்பது என எந்தவித விவகாரங்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.