25 in Thiruvananthapuram
TV Next News > News > Kerala > Local > காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்.. 28 பேரை காவு வாங்கிய குஜராத் தீ விபத்து.. திடுக்கிட வைக்கும் தகவல்

காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்.. 28 பேரை காவு வாங்கிய குஜராத் தீ விபத்து.. திடுக்கிட வைக்கும் தகவல்

4 months ago
TV Next
56

ராஜ்கோட்: தீ விபத்தால் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த குஜராத்தின் ராஜ்கோட் கேமிங் ஜோன் நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டும் இன்றி ஒரே ஒரு அவசர வழிபாதை மட்டுமே அந்த மைதானத்தில் இருந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விளையாட்டு அரங்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என பலரும் விளையாட்டு திடலுக்கு நேற்று வருகை தந்து இருந்தனர். தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடியும், உணவு விடுதிகளுக்கு சென்று உணவுகளை ருசித்தும் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்து கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் விளையாட்டு அரங்கில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட விளையாட்டு திடலில் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்தத அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விளையாட்டு திடலில் வார இறுதி டிஸ்கவுண்ட் என 99 ரூபாய்க்கு ஆஃபர் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தை விட நேற்று அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் விசாரணைக்கு பிறகே தீ விபத்திற்கான காரணம் தெரியும். இந்த விளையாட்டு மைதானத்தில் அவசர காலத்தில் வெளியேறுவதற்கு போதுமான எக்சிட் கேட்கள் இல்லாமல் இருந்துள்ளது. வெறும் ஒரு எக்சிட் கேட் மட்டுமே இருந்தும் தீ பாதுகாப்பு தொடர்பான தடையில்லா சான்றிதழும் பெறாமல் இந்த கேமிங் ஸோன் இயங்கி வந்துள்ளது.

விளையாட்டு மைதானத்தின் அருகிலேயே உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகளும் நடந்துள்ளன. அங்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றுள்ளதால், அதில் இருந்து வந்த தீப்பொறிகள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த ராஜ்கோட் மேயர் நயனா பேதடியா, என்.ஓ.சி என்படும் தடையில்லா சான்றிதழை விளையாட்டு மண்டலத்தை நடத்தி வந்த நிறுவனம் பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தீ அணைப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் எப்படி இவ்வளவு பெரிய விளையாட்டு அரங்கு இயங்கி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. நுழைவு வாயில் அருகிலேயே தற்காலிக கூடாரம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், பீதி அடைந்த மக்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.” என்றார். ராஜ்கோட் விபத்தை தொடர்ந்து குஜராத்தில் உள்ள அனைத்து விளையாட்டு திடல்களூம் உரிய விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply