25 in Thiruvananthapuram
TV Next News > News > Tamil News > 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. “ஜனநாயக பெருவிழா” சற்று நேரத்தில் தொடங்குகிறது

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. “ஜனநாயக பெருவிழா” சற்று நேரத்தில் தொடங்குகிறது

4 weeks ago
TV Next
17

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல் சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


ஜனநாயக திருவிழா என வர்ணிக்கப்படும் இந்தியாவின் லோக்சபா தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. காலை 7 மணிக்கு லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்து தங்களது வாக்கை செலுத்த இருக்கின்றனர்.

முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு, புதுவை உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும் சற்று நேரத்தில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

 


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய அரசை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி லோக்சபா தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி நாட்டில் லோக்சபா தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்சபா தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு, புதுவையில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

 

இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 ஆம் தேதி நடைபெறுகிறது.

முதற்கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. அருணாசலபிரதேசம் – 2, அசாம் – 5, பீகார் – 4, சத்தீஸ்கர் – 1, மத்திய பிரதேசம் – 6, மகாராஷ்டிரா – 5, மணிப்பூர் – 2, மேகாலயா – 2, மிசோரம் -1, நாகலாந்து – 1, ராஜஸ்தான் – 12, சிக்கிம் – 1, தமிழ்நாடு – 39, திரிபுரா – 1, உத்தர பிரதேசம் – 8, உத்தரகாண்ட் – 5, மேற்கு வங்கம் – 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் – 1, ஜம்மு காஷ்மீர் – 1, லட்சத்தீவு – 1, புதுச்சேரி – 1. ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 102 லோக்சபா தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மாத காலம் தேர்தல் களம் அனல் பறந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரங்கள் ஓய்ந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று தொடங்கியிருக்கும் 102 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் மற்றும் 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தொடங்குகிறது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதைப்போல சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் இன்று தேர்தல் தொடங்குகிறது. இதில், 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளன.

Leave a Reply