29 in Thiruvananthapuram
TV Next News > News > Tamil News > ரசு ஊழியர்களை கேவலமா பேசிட்டு இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களே.. எடப்பாடிக்கு திமுக பதிலடி!

ரசு ஊழியர்களை கேவலமா பேசிட்டு இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களே.. எடப்பாடிக்கு திமுக பதிலடி!

7 months ago
TV Next
89

சென்னை: ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, இப்போது நீலிக்கண்ணீர் வடித்து கபட நாடகம் போடுகிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது, ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் எனக் கூறி இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

அரசு ஊழியர்களுக்கு திமுக: மேலும், அதிமுக என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அதிமுகவால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும், துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே! எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும்தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம் என விமர்சித்திருந்தார் ஸ்டாலின். எடப்பாடி பதில்: இதற்கு பதிலடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை 3 ஆண்டுகளாக நிறைவேற்றாத ஸ்டாலின், இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும் என்கிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற சொல்லாடலை நினைவுபடுத்தும் வெறும் வாய்ச்சொல்லில் வீரனடி என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கறிவார்கள். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்யாததையா இப்போது லோக்சபா தேர்தல் முடிந்ததும் செய்யப் போகிறார்கள்? முதல்வரின் தொடர் நாடகத்திற்கு அறிவார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மயங்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். திமுக பதிலடி: இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா என அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தினார். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்தியது அதிமுக ஆட்சி என்று விமர்சித்துள்ளது.

 


மேலும், அதிமுக ஆட்சியில் ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்றும் பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லோரும் அறிவார்கள் என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. 1988ஆம் ஆண்டு வரை குறைவான சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசுதான். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திமுக அரசு அமைந்த காலங்களில் வழங்கிய சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 19 ஆண்டுகளில் 4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பொருளாதாரத்தை உயர்த்தினார் என திமுக தெரிவித்துள்ளது. கபட நாடகம்: மேலும், அதிமுக அரசு ஏற்படுத்திவிட்டுப்போன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படிகளை அவ்வப்போது உயர்த்தி அளித்து வருகிறது எனவும் திமுகவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது நீலிக்கண்ணீர் வடித்து கபட நாடகம் போடுகிறார். எடப்பாடி பழனிசாமியின் நீலிக்கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply