ஜெய்ப்பூர்: வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மீண்டும் பாஜகவின் கை தான் ஓங்கி இருக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் தோற்ற நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் லோக்சபா தேர்தல் தொடர்பாக மாத்ருபூமி – பிமார்க் (Mathurubhumi – P MARQ) சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ராஜஸ்தான் லோக்சபா தேர்தலில் பாஜக 23 முதல் 25 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் பூஜ்ஜியம் முதல் 2 தொகுதிகளில் ஜெயிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தை பாஜக ஸ்வீப் செய்யும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 2 தொகுதி இல்லாவிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் பாஜக ஸ்வீப் செய்வது இது முதல் முறையல்ல.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்படி இருந்தும் கூட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.