25 in Thiruvananthapuram

விஏஓ டூ தாசில்தார்.. காணாமல் போன வருவாய் துறை ஆவணங்கள்.. தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்

Posted by: TV Next October 29, 2025 No Comments

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர், கிராம வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க கோரியிருந்தார். ஆனால் வருவாய் துறை ஆவணங்களை வழங்கவில்லை.. இந்நிலையில் வருவாய்த்துறை ஆவணங்கள் மாயமானது குறித்து கேள்வி எழுப்பிய மாநில தகவல் ஆணையம் ஆவணங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டியது வருவாய்த்துறையின் கடமை என கண்டனம் தெரிவித்துள்ளது.

கிராம வரைபடம் மற்றும் அந்த காலத்து நில ஆவணங்கள் உள்பட பல்வேறு வகையான நில ஆவணங்கள் வருவாய்துறையிடம் தான் உள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பழனியப்பன் என்பவர், கிராம வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க கோரியிருந்தார். ஆனால், இந்த ஆவணங்களை பொது தகவல் அலுவலர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொது தகவல் அலுவலரான நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு எதிராக சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அவர் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘மனுதாரர் கோரிய கிராம வரைபடம் அலுவலக பதிவறையில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை’ என நாமக்கல் மாவட்ட பொது தகவல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த தகவல் ஆணையம், ‘மனுதாரர் கோரிய ஆவணங்களை அலுவலக கோப்புகளை தேடிப்பார்த்து வழங்க வேண்டும்’ என கடந்த 23.3.2022 அன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் விசாரித்தார். அப்போது, நேரில் ஆஜரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, ‘மனுதாரர் கோரிய ஆவணங்கள் சேலம் நில அளவை அலுவலகத்தில் இருக்கலாம் எனக் கருதி அந்த ஆவணங்களின் நகல் கோரி கடிதம் அனுப்பினோம். அவர்கள் தங்கள் அலுவலக பராமரிப்பில் அந்த ஆவணங்கள் இல்லை என தெரிவித்து விட்டனர்’ என்று பதில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், “தகவல் ஆணையம் 23.3.2022 அன்று பிறப்பித்த உத்தரவை மதிக்காததால் நாமக்கல் கலெக்டர் அலுவலக பொது அதிகார அமைப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் வருவாய்த்துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். ஆனால் அந்த ஆவணங்கள் பராமரிப்பில் இல்லை என அளிக்கப்பட்டுள்ள பதில் முற்றிலும் ஏற்புடையது கிடையாது.

நிரந்தர பதிவேடுகளான கிராம வரைபடம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் வருவாய்த்துறையின் முக்கிய கடமையாகும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் எப்படி மாயமானது? என்பது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் வருவாய் துறை ஆவணங்கள் காணாமல் போனதற்கு பொறுப்பான நபர் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து அது குறித்து அறிக்கையை டிசம்பர் மாதம் 18-ந் தேதி நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.