பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்று வெறும் 14 மணி நேரத்தில் அந்நாட்டுப் பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா செய்தது. அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. இது உலகளவில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் ராஜினாமா செய்துள்ளார். அவருடைய புதிய அமைச்சரவை இன்று தான் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சில மணிநேரங்களிலேயே அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் எந்தளவுக்கு மோசமான அரசியல் நெருக்கடி இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் பிரான்ஸில் மிக மோசமான ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு இந்தளவுக்கு மோசமான சூழல் ஏற்பட என்ன காரணம்.. பிரான்ஸில் அடுத்து என்ன நடக்கும்.. இதனால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லெகார்னு 27 நாட்களுக்கு முன்பு தான் பிரான்ஸ் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது தனது அமைச்சரவையை அறிவித்த 14 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்தார். கடந்த 2022க்கு பிறகு பிரான்ஸ் 5 பிரதமர்களைப் பார்த்துவிட்டது. ஆனால், யாராலும் ஆட்சியைத் தொடர முடியவில்லை.இப்போது ராஜினாமா செய்த லெகார்னு கூட பிரான்ஸ் அதிபர் அதிபர் மக்ரோனின் நெருங்கிய நண்பர் தான். இதற்கு முன்பும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். ஆனால், அவராலேயே தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் சமரசம் செய்யத் தயாராக இருந்தேன்.. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் திட்டத்தை முழுமையாக மற்ற கட்சிகள் ஏற்க வேண்டும் என்கிறார்கள். கூட்டணி அரசு அப்படி இயங்க முடியாது” என்றார்.
இந்த நெருக்கடியின் மூல காரணமே 2024ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தான். அந்தத் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. இடதுசாரி, தீவிர வலதுசாரி மற்றும் மக்ரோனின் மத்திய-வலதுசாரி கூட்டணி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரி கூட்டணி அதிகபட்சமாக 188 இடங்களை வென்றது. அதிபர் மக்ரோனின் கட்சி 161 இடங்களிலும் தீவிர வலதுசாரி கூட்டணி 142 இடங்களிலும் வென்றது. இதனால் 577 சீட்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 289 சீட்கள் யாருக்கும் கிடைக்கவில்லை.
அப்போது ஆரம்பித்த இந்தச் சிக்கல் இப்போது வரை நீள்கிறது. 2027ல் அங்கு பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறுவதும் இதற்கு இன்னொரு காரணமாகும். பிரான்ஸ் விதிகளின்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக இருக்க முடியாது என்பதால் அவரால் போட்டியிட முடியாது. இதனால் போட்டி ஓபனாக இருப்பதால் எந்தவொரு கட்சியும் சமரசம் செய்து தங்கள் ஆதரவாளர்களிடையே அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பவில்லை.
தீவிர வலதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மக்ரோன் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளன. மறுபுறம் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதோடு சேர்த்து மக்ரோனும் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இப்படியொரு இடியாப்பச் சிக்கல் சூழலில் தான் பிரான்ஸ் இருக்கிறது.
இப்போது மக்ரோனுக்கு 3 ஆப்ஷன்கள் உள்ளன. முதலாவதாக வேறு ஒருவரைப் புதிய பிரதமராக நியமிக்கலாம். ஆனால், ஏற்கனவே இதுபோல முயற்சி எடுத்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இதை முயற்சி செய்து பார்ப்பது நிலைமை மோசமாகவே மாற்றும். இரண்டாவதாக, அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை அறிவிக்கலாம். இருப்பினும், இதைச் செய்வதிலும் அவருக்குத் தயக்கம் இருக்கிறது. ஏனென்றால் தற்போது வரை அங்கு வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் மீண்டும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.அடுத்து கடைசி வழி மக்ரோன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வது. ஆனால், 2027 வரை பதவிக்காலம் இருப்பதால் அதற்கு முன்பு ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதில் மக்ரோன் உறுதியாக இருக்கிறார்
இந்தளவுக்கு அங்கு ஒரு குழப்பமான மற்றும் தெளிவற்ற சூழல் இருக்கிறது. இது பிரான்ஸ் மட்டுமின்றி உலகெங்கும் எதிரொலிக்கிறது. குறிப்பாக பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய நாடாக இருக்கும் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம் நிதிச் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் பங்குச்சந்தை சரியும் நிலையில், தங்கம் விலை உயரவும் இது காரணமாக இருக்கிறது.
.