24 in Thiruvananthapuram

ஒரே ஒரு ஹேஷ்டேக்.. ஒட்டுமொத்தமாய் மாறிய தலையெழுத்து! இயக்குனர் ஷங்கர் சொன்னதை செய்து காட்டிய GEN

Posted by: TV Next September 14, 2025 No Comments

‍சென்னை: திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் ஒரே ஒரு #ஹேஷ்டேக் மூலம் புரட்சி ஏற்படும் எனக் கூறியிருந்ததை கடுமையாக ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள். ஆனால் அதேபோல ஒரு ஹேஷ்டேக்கை வைத்து நேபாளத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்வியில் ஊழல், கருப்பு பண ஒழிப்பு, என ஷங்கர் சொன்னதெல்லாம் பிறகு நடந்திருக்கிறது என அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். காதல், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், படத்தின் காட்சிகளில் பிரம்மாண்டம் என தமிழ் சினிமா ரசிகர்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப் போட்டவர் தான் ஷங்கர்.

காதலன் தொடங்கி ஜென்டில்மேன், முதல்வன், சிவாஜி, இந்தியன், இந்தியன் 2 என அவரது படங்களை சமூகத்துக்கு ஏதாவது ஒரு கருத்துக்களை நிச்சயம் சொல்வார். ஜென்டில்மேன் படத்தில் கல்வியில் ஊழல், இந்தியன் படத்தில் லஞ்சம், முதல்வன் படத்தில் அரசியல் புரட்சி என பல விஷயங்களைச் சொல்லி இருப்பார்

ஆனால், கடைசியில் அவரது இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமலும் ஷங்கரும் சேர்கிறார்கள் என்ற செய்தியே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக மெகா ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள் என்ற தகவல் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. ஆனால் படம் வெளியான பிறகு மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

 

கமலஹாசனின் வயது, தோற்றம் உள்ளிட்டவற்றோடு சோஷியல் மீடியா குறித்த காட்சிகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ‘கமான் இந்தியன்’ என்ற ஒரே ஹேஷ்டேக்கால் ஊழலை ஒழித்து விட முடியும், அரசியலை மாற்றி அமைக்க முடியும் என்பதெல்லாம் நடக்குமா என கடுமையாக விமர்சித்தனர். ஆனால் உண்மையில் ஷங்கர் சொன்னது சில மாதங்களிலேயே நிரூபணமாகி இருக்கிறது. அதுவும் அண்டை நாடான நேபாளத்தில். அங்கு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கிறது.

ஆனால் ஊழல் போன்றவற்றால் நாட்டில் வேலையின்மைத் திண்டாட்டம், பஞ்சம் ஆகியவை ஏற்பட்டு இருப்பதாகக் கூறி இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக இளைஞர்கள் வேலை இன்றி தவித்துக் கொண்டிருக்க அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆடம்பர கார்களிலும் வலம் வருவது, ஹோட்டல்களில் சொகுசு வாழ்க்கை வாழ்வது என உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் #நெப்போகிட்ஸ் #நெப்போபேபி ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இதனால் தான் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை நேபாள அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் பிரதமர் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். ராணுவம் ஆட்சியைப் பிடித்த நிலையில் தற்போது இடைக்காலப் பிரதமர் பொறுப்பேற்று இருக்கிறார். விரைவில் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைத்திருக்கின்றனர் ஜென் இசட் எனப்படும் இளைய தலைமுறை.

இளைஞர்கள் நினைத்தால் நாடு மட்டுமல்ல ஒரு உலகத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதுதான் நேபாளம் நமக்குச் சொன்ன பாடம். ஆனால் இதைத்தான் இந்தியன் 2 படத்திலும் ஷங்கர் சொல்லியிருந்தார். ஆனால் அவரை ட்ரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர் நெட்டிசன்கள். இது மட்டுமல்ல ஏற்கனவே பல அரசியல் கருத்துகளை சினிமாவில் சொல்லி இருக்கிறார்.

உதாரணத்துக்கு முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வர், இளைஞர் ஆட்சியைப் பிடிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்ட நிலையில் படம் ஹிட்டானாலும் சிலர் அதனை விமர்சித்தனர். ஆனால் டெல்லி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இதேபோல சிவாஜி படத்தில் ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்படுவதாக படத்தின் இறுதி நிமிட டைட்டில் கார்டில் ஷங்கர் போட்டு இருப்பார். அப்போதும் அதனை விமர்சித்தனர். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.