சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிந்துவிட்டது. அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன
ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், மேகாலயா ஆளுநராக 18 டிசம்பர் 2019 முதல் 26 ஜனவரி 2020 வரையிலும் பணியாற்றினார்
அவர் 1976 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் மற்றும் கேரளா கேடருக்கு ஒதுக்கப்பட்டார், அங்கு அவர் பல ஆண்டுகளாக பணியாற்றினார். அதன்பின் பாஜக ஆட்சியில் ஆளுநர் ஆன இவர் 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாடு ஆளுநராக இருக்கிறார்.
தற்போது ஆளுநராக உள்ள ரவி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். உதாரணமாக ஏப்ரல் 2022 இல் உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி ஏ.ஜி. பேரறிவாளனின் மன்னிப்பு மனுவை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்த ரவியின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியது, அத்தகைய நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் வேர்களை அழிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளை.. மாநில முதல்வர் சொல்வதை வழிமொழிவதே ஆளுநரின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தது
.அதேபோல் ஜனவரி 2023 இல், “தமிழகம்” என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் என்று ரவி பரிந்துரைத்தார், மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆளும் அரசியல் கட்சிகள் பிற்போக்குத்தனமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரவியின் கருத்துக்கு திமுக, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சிபிஐ(எம்) ஆகிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின் ஆளுநர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கிக்கொண்டார்.
அதேபோல் ஜனவரி 9, 2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது,ரவி தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட உரையில் இருந்த முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பேசினார். பெண்கள் அதிகாரம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, கருணை மற்றும் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் பற்றிய பகுதிகள் போன்ற சொற்களைத் தவிர்த்துவிட்டார். அரசு மூலம், தயாரிக்கப்பட்ட உரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. அதை அவர் மீறிய நிலையில் அவரின் பேச்சை முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் மூலம் நீக்கினார்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட மசோதாக்களை இவர் ஏற்காமல் இருந்ததை கண்டித்து உச்ச நீதிமன்றமே அந்த மசோதாக்களை நிறைவேற்றியது கவனம் பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் முடிந்துள்ளதால் புதிய ஆளுநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் புதிய ஆளுநர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் அவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் அவரை ஆளுநராக நீடிக்க வைக்கலாமா? மத்தியில் பெரிய பொறுப்பு கொடுக்கலாமா? என்ற விவாதம் எழுந்தது. இதற்கு இடையேதான் டெல்லியில் புதிய ஆளுநர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் தமிழ்நாட்டிற்கு அவர் அனுப்பப்படுவார் என்றும் தகவல்கள் வருகின்றன.
இதற்கான ஆலோசனைகளை, கடைசி கட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்