28 in Thiruvananthapuram

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி? அகவிலைப்படி உயர்கிறதா.. புத்தாண்டு குட்நியூஸ் தருகிறாரா தமிழக முதல்வர்?

Posted by: TV Next April 14, 2025 No Comments

சென்னை: அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசு ஊழியர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.. தேர்தலின்போது தந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்..

அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் அரசு ஊழியர்களுக்கு இருந்து வருகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை, கடந்த 2003ல் அன்றைய அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியது. அன்று முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று நொந்து சொல்கிறார்கள் ஊழியர்கள்..இப்படிப்பட்ட சூழலில், பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக அரசு கமிட்டி அமைத்துள்ளது. ஆனால், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த மாநிலங்களில் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை..

அப்படியிருக்கும்போது, குழு நாடகங்களை நடத்துவதை தவிர்த்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஊழியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் கோரிக்கைகளை விடுத்தபடி உள்ளன.

இதுஒருபுறமிருந்தாலும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதுமே, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடகடந்த மார்ச் மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு 53ல் இருந்து 55% அகவிலைப்படி உயர்ந்தது. எனவே, தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்ந்தும் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.. அதில், தொகுப்பூதியம். மதிப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அதாவது 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கசிந்திருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை கொண்டாட்ட பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது… எனவே, இன்று அல்லது நாளை அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

அப்படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தினால் நொந்துபோயுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானால், அது அரசு ஊழியர்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் என்றும் நம்பப்படுகிறது.