அபுதாபி: அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வாங்கும் யோசனையை கைவிட்டுவிட்டு, துருக்கியின் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் ஒதுக்கி தள்ளும் விமானத்தை டிரம்ப் இந்தியாவின் தலையில் கட்ட பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தங்களது விமானம்தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில், அதன் நட்பு நாடான அமீரகமே F-35ஐ வாங்க ஆர்வம் காட்டாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.
துருக்கி தற்போது 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக, துருக்கி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின்(TAI) தலைவர் ‘மெஹ்மத் டெமிரொக்லு’ கூறியுள்ளார். அபுதாபியில் ‘IDEX 2025’ எனும் பெயரில் தற்போது பாதுகாப்புதுறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றிருந்த மெஹ்மத், மேற்கூறிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்காவின் போர் விமானத்தை தவிர்க்கும் இரண்டாவது அரபு நாடாக அமீரகம் மாறியிருக்கிறது. ஏற்கெனவே, சவுதி தலையில் அமெரிக்கா F-35ஐ வைத்து மிளகாய் அரைக்க பார்த்திருக்கிறது. ஆனால், உஷாரான சவுதி சைலன்ட்டாக நழுவிக்கொண்டது. அதே பாணியில் அமீரகமும் இப்போது கழன்றுக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் விமானங்களை அமீரகம் வாங்க மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே F-22 குறித்த பேச்சுகள் எழுந்தபோது, பிரான்ஸ் பக்கம் கைகாட்டி ரஃபேல் விமானங்களை வாங்கி தப்பித்துவிட்டது. இப்போது, துருக்கியின் KAAN விமானங்களை வாங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.