28 in Thiruvananthapuram

மண்ணில் புதையுண்ட 7 பேரையும் உயிருடன் மீட்க விரைவாக செயல்படுங்க.. எடப்பாடி வைத்த கோரிக்கை!

Posted by: TV Next December 2, 2024 No Comments

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு வீட்டில் இருந்த 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. இதற்கிடையே, திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில், இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

அதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த மூன்று சிறார்கள் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை வீடுகள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், மழை பெய்து கொண்டிருந்ததாலும், மின்சாரம் இல்லாததாலும், பாறை உருளும் அபாயம் இருந்ததாலும் அவர்களால் மீட்புப்பணியை தொடர முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால், மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இன்று அதிகாலையில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

மண் சரிவு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் ஏற்பட்ட நிலையில், தற்போது 18 மணி நேரத்தைக் கடந்துள்ளது. இன்னும் மண்ணை அகற்றும் பணி நிறைவடைய தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.

அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.