சென்னை: வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார். இன்று மாலை டெல்லியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்பது அவரது சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்து உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு இது ஆரோக்கியமான அறிகுறி, அடுத்த ஐந்து ஆண்டுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக கூட்டணி 40 சீட்களில் வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றது ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.