26 in Thiruvananthapuram

‛‛மோடியால் தான் முடியும்’’.. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துங்க! டெல்லி ஜமா மசூதி இமாம் கூறிய வார்த்தை

Posted by: TV Next February 22, 2024 No Comments

டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 200க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். மேலும் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.

போர் தொடங்கிவிட்டதாக கூறிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விமானப்படை மூலம் காசாவில் தாக்குதல் நடத்தினார். தற்போது காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த போரில் தற்போது வரை காசாவில் 21,300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் காசாவில் ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் காசா மீதான இஸ்ரேலின் போரை பிரதமர் மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் தவறிவிட்டது.

குறிப்பாக இந்த விஷயத்தில் முஸ்லிம் நாடுகள் தங்களின் பொறுப்புகளை சரியாக செய்யவில்லை. போர் நிறுத்ததற்கான செயலில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் பிரதமர் மோடியால் போரை நிறுத்த முடியும். இதற்கு காரணம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் வெளியுறவுத்துறை மூலம் இஸ்ரேலுடன் பேசி பிரதமர் மோடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார். இஸ்ரேல்-காசா விவகாரத்தில் இந்தியா என்பது இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை கண்டித்தது. அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். போரை கைவிட்டு இருதரப்பும் பேசி எல்லையை வரையறுத்து அமைதியாக வாழ வேண்டும் என இந்தியா போர் தொடங்கியது முதலே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.