திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு நடத்தினார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு விஜய்யை பார்க்க அதிகளவு கூட்டம் கூடியது. இதனால் நெரிசல் ஏற்பட்ட நிலையில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அது போல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. ஆனால் இவற்றை எதிர்த்த தவெகவினர், உச்சநீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை கோரினர்.
அவர்கள் கேட்டது போலவே உச்சநீதிமன்றமும், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சென்னையை அடுத்த பனையூரில் கடந்த வாரம் சிபிஐ அதிகாரி ஒருவர் நேரில் வந்து விஜய்யின் பிரச்சார வாகனத்தை பார்வையிட்டார். மேலும் அதில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் கொடுத்துவிட்டு சென்றார்
இந்த நிலையில் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக பனையூர் அலுவலக உதவியாளர் குரு மற்றும் தவெக வழக்கறிஞர் அணியின் திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அரசு ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களை அளித்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3ஆவது நாளாக நேற்றைய தினம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உள்பட 8 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த இரு தினங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர் உள்பட 19 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று 8 பேரிடம் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் மேலும் சில கோப்புகளை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க தவெகவுக்கு சம்மன் கிடைத்துள்ளதாம். இதனால் அவற்றை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து வழிபாடு நடத்தினார்.
