சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் விளக்கியுள்ளார். மேலும் விஜய்யுடன் தான் போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சிறு வயது நண்பனான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலையில் என்னதான் ஆறுதல் சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்துவிடும். ஆகவே நான் எந்த ஆறுதலையும் சொல்லாமல் உடம்பை பார்த்துக் கொள், கடவுளை நம்பு என்று மட்டும் சொல்லிவிட்டேன்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
அது போல் சஞ்சீவ் கலந்து கொண்ட ஒரு பிரஸ் மீட்டில், “விஜய் ஏன் பிரஸ்ஸை சந்திப்பதே இல்லை, அவருக்கு என்ன பயமா” என கேட்டதற்கு, சஞ்சீவ், “அண்ணே ஏன் இப்படி கேக்குறீங்க, அவருக்கு என்ன பயம், சரியான நேரம் கிடைக்கும் போது அவர் நிச்சயம் உங்களை சந்திப்பார்” என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து விஜய் குறித்த கேள்விகளுக்கு, சினிமா நிகழ்வு குறித்த இந்த பிரஸ்மீட்டில் இது குறித்து வேண்டாமே என்றும் சஞ்சீவ் தெரிவித்தாராம்.
தவெக பிரச்சார கூட்டம் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.ஆனால் அந்த வீடியோவில் வருத்தமோ மன்னிப்போ கேட்கவில்லை. மேலும் தன்னை பார்க்க வந்துதான் இந்த சம்பவம் நடந்தது என்று கூட அவர் சொல்லாமல் அந்த குற்றச்சாட்டை வேறு யார் மீதோ திணிக்க முயற்சித்தார்.
இந்த நிலையில் விஜய் தற்போது 33 குடும்பத்தினரிடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த குடும்பத்தினரிடம் விஜய் பேசிய போது உடைந்து அழுதுவிட்டாராம். மேலும் தன்னை பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதே என அவர்களிடம் வருத்தத்தை தெரிவித்தாராம். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ விஜய்க்கு ஆறுதல் தெரிவித்தனராம். தாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள் என்றனராம்.
மேலும் தான் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன் என்றும் அவர்களிடம் விஜய் வாக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. நேரில் செல்லும் போது விஜய் தான் அறிவித்த நிவாரணமான தலா ரூ 20 லட்சத்தை கொடுக்கக் கூடும் என தெரிகிறது. கரூர் சம்பவ தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் செல்ல விஜய் அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். கிட்டதட்ட 12 நாட்களுக்கு மேலாகியும் நீலாங்கரை வீடு, பட்டினம்பாக்கம் இல்லத்தை தவிர விஜய் வேறு எங்கு பயணிக்காமல் இருந்து வருகிறார். தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பேசி வருகிறாராம். மேலும் கட்சியில் முக்கிய பணிகளை ஒற்றை ஆளாக இருந்து கவனித்துக் கொள்கிறார் என்கிறார்கள். பிரச்சினை என வந்ததும் விஜய்யை விட்டுவிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் பதுங்கியுள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.