29 in Thiruvananthapuram

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஸ்ரீவர்ஷினி.. சர்வேயர் தந்தை உள்பட குடும்பமே சிறையில்!

Posted by: TV Next October 8, 2025 No Comments

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவியை கைது செய்தனர். இதற்கு உதவி செய்ததாக மாணவியின் பெற்றோர்களையும் கைது செய்தனர். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது.. அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தான் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இல்லாவிட்டால் கோடிகளில் செலவு செய்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வேண்டிய நிலை வரும். அதுவும் கூட இப்போது கடினமே.. எனவே டாக்டருக்கு படிக்க விரும்பும் பலர் 2 வருடம் 3 வருடம் கூட விடாமல் முயற்சி செய்து, அதிக மதிப்பெண் பெற்று அதன்பிறகே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருகிறார்கள்.

 

ஆனால் சிலர் குறுக்குவழியில் ஜெயிக்க விரும்புகிறார்கள். நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து அரசு மருத்துவ கல்லூரியில் சேர விரும்புகிறார்கள். எப்படியோ ஏமாற்றி சேர்ந்தாலும், இறுதியாக சோதனையின் போது சிக்கி கொள்கிறார்கள். அப்படி சிக்கினால் குடும்பமே கம்பி எண்ண வேண்டியதிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. ஸ்ரீவர்ஷினி மீது புகார் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடந்தது. இதில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மொத்தம் 30 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 27-ந்தேதி பழனியை சேர்ந்த காருண்யா ஸ்ரீவர்ஷினி மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்ததாக கூறினார். அத்துடன் தனது தந்தை சொக்கநாதன், தாயார் விஜயமுருகேஸ்வரி ஆகியோருடன் வந்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.

பின்னர் மாணவியின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஆய்வு செய்ததில் மாணவி நீட் தேர்வில் 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாகவும், அதன்மூலம் கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் போலியாக சான்றிதழ்களை தயாரித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். குடும்பமே கைது இந்த புகார் மனு தொடர்பாக திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி (வயது19), சொக்கநாதன் (50), விஜய முருகேஷ்வரி (43) ஆகியோரை கைது செய்தனர். இதில் சொக்கநாதன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்வேயராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு யார் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

பொதுவாக விசாரணையின் போது, முதற்கட்டமாக, போலிச் சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால், மாணவரின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும். ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் புரோக்கர்கள் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடருவார்கள், போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர் நீட் உள்ளிட்ட எந்தவொரு அரசுத் தேர்வையும் எதிர்காலத்தில் எழுத முடியாமல் நிரந்தரமாகத் தடை செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கூட கிடைக்காது அத்துடன் போலி நீட் சான்றிதழ் தொடர்பான பெரும்பாலான சட்டப் பிரிவுகள் எல்லாமே ஜாமீனில் வெளிவர முடியாத (Non-bailable) பிரிவுகள்.. எனவே காவல் நிலையத்திலேயே ஜாமீன் கிடைக்காது. ஜாமீன் பெற நீதிமன்றத்தை அணுக வேண்டியதிருக்கும். நீதிமன்றம் தான் ஜாமீன் விவகாரத்தில் முடிவெடுக்கும். முன்னதாக இதுபோன்ற வழக்கில், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவி மற்றும் அவரது தந்தைக்கு, 30 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் ஜாமீன் பொதுவாக அவ்வளவு எளிதாக உடனே கிடைக்காது.எனவே நீட் தேர்வில் போலி சான்றிதழ் தயாரிக்க உதவுவதாக யாராவது அணுகினால் மறுத்துவிடுங்கள். அவர்களை பற்றி காவல்துறையில் கூறுங்கள்.