பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 2 நாட்களாக பீகாரில் ஆய்வு மேற்கொண்டிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் பீகார் சட்டப்பேரவைக்கான ஆட்சிக்காலம் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக 110 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 23.11% வாக்குகளையும், அடுத்தபடியாக பாஜக 19.46% வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 15.39% வாக்குகளையும் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தலா 9.48% மற்றும் 3.16% வாக்குகளை பெற்றிருந்தன.
இந்தமுறை எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்றும், தொகுதி விவரங்களை கூட்டணி தலைவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டணி தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டம் சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, “அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சில விவரங்களை தற்போது வெளியிட முடியாது. நாளை மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாவற்றையும் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்
அதேபோல ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அலோக் மேத்தா கூறுகையில், “பெரும்பாலான விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்பட உள்ளன. ஆனால், இரண்டு நாட்களில் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் எல்லாவற்றையும் அறிவிப்போம்” என்று கூறியிருக்கிறார். ஒப்பீட்டளவில் என்டிஏ கூட்டணியை விட, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்ட தாமதமாகிறது.2020ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில், 88.06% பேர் 50%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக வெற்றி வேட்பாளர் பெற்ற வாக்கு சதவிகிதம் 61.39% தான். போஜ்பூர் தொகுதியில் போட்டியிட்ட CPI(ML)(L) கட்சியைச் சேர்ந்த மனோஜ் மஞ்சில் 61.39% வாக்குகளுடன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 29 வேட்பாளர்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். 243ல் 50 பேர் என்பது வெறும் 11.93% ஆகும்.
முசாபர்பூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்குள்ள 11 தொகுதிகளில், ஔராய் தொகுதியின் வெற்றியாளர் மட்டுமே 50 சதவீத வாக்குகளைக் கடந்தார். அவருக்கு 52.33% வாக்குகள் கிடைத்தன. மற்ற 10 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் 50%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டுத் தேர்தலில், 3 பெண் வேட்பாளர்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களில் ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர், மற்ற இருவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்கள்.
பாஜகவைச் சேர்ந்த கவிதா தேவி (கோதா) 53.31% வாக்குகளையும், RJD-யைச் சேர்ந்த ரேகா தேவி (மசௌதி) 50.21% வாக்குகளையும், கிரண் தேவி (சந்தேஷ்) 51.54% வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். மாநிலம் முழுவதும் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் 17 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் 6 பேர், CPI(ML)(L)-ஐ சேர்ந்தவர்கள் 3 பேர், JDU, காங்கிரஸ், AIMIM ஆகியவற்றில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர்.