டெல்லி: இப்போது இந்தியா மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தியா மீதான வரியை அமெரிக்கா சீக்கிரமே ரத்து செய்யலாம் என்றும் ஒட்டுமொத்த வரி 15%ஆக குறைக்கப்படலாம் என்றும் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அப்படித் தான் இந்தியா மீது அவர் 50% வரியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இது இரு தரப்பு வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போகும் ஏற்றுமதி 40% வரை இதனால் குறையும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என்று பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் வரியால் இந்தியாவில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அனந்த நாகேஸ்வரனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஸ்வரன், “இந்தியாவுக்கு அபராதம் எனச் சொல்லி அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் விதித்த 25% வரி நவம்பர் இறுதிக்குள் திரும்பப் பெறப்படும் என நினைக்கிறேன். நவம்பர் 30ம் தேதிக்குப் பிறகு இந்த வரிகள் இருக்காது என்று நான் நம்புகிறேன்.இதை எந்தவொரு ஆதாரத்தின் அடிப்படையிலும் நான் சொல்லவில்லை. ஆனால், வரிகளை அமெரிக்கா வாபஸ் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சமீப காலங்களில் நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்த்தால் ஓரிரு மாதங்களில் இந்த வரி விவகாரத்தில் ஒரு தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன். அபராதமாகச் சொல்லிப் போட்ட வரி மட்டுமில்லை.. பரஸ்பர வரியும் நீக்கப்படும் என நம்புகிறேன்” என்றார்
இந்தியா மீது கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் முதலில் 25% வரை பரஸ்பர வரியாக டிரம்ப் அறிவித்தார். இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், இந்த வரி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ரஷ்ய எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் பார்ப்பதாகவும் உக்ரைன் போர் தொடர இதுவே காரணம் எனச் சொல்லிக் கூடுதலாக 25% வரியை அபராத வரி எனச் சொல்லி டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்தியா மீதான அமெரிக்க வரி 50%ஆக அதிகரித்தது. இந்த வரி தான் நீக்கப்படலாம் என்கிறார் ஆனந்த நாகேஸ்வரன்.
இப்போது இந்தியா மீது 25% பரஸ்பர வரி விதிக்கப்படும் நிலையில், அது 10-15%ஆக குறைக்கப்படலாம் என்றும் நாகேஸ்வரன் தெரிவித்தார். ஒட்டுமொத்த வரிப் பிரச்சனையும் அடுத்த 8-10 வாரங்களுக்குள் தீர்க்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்றும் தனது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.சமீபத்தில் தான் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் டெல்லிக்கு வந்து இந்தியாவின் தலைமை வர்த்தகப் பிரதிநிதியும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளருமான ராஜேஷ் அகர்வாலை சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பு பாசிட்டிவாக இருந்ததாகவே இரு தரப்பும் கூறியது. இது மட்டுமின்றி பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்தும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.