சென்னை: சென்னை தங்கச்சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்யும் பணியை உயர் அதிகாரிகள் நடத்தினார்கள். அதில் 21 பேருக்கு தங்க நகைகள் பெயரில் கடன் வழங்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதன்படி வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.5 கோடியை வங்கி மேலாளர் சுருட்டியது தெரியவந்தது. இந்த மோசடிக்கு துணை போன நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். இவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
தங்க நகையில் விலை இப்போது ஒரு சவரன் 75000த்தை தாண்டிவிட்டது. 5 வருடம் முன்பு வெறும் 35000 என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது 75000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. ஏன் கடந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நகை விலை வெறும் 52 ஆயிரம் என்கிற அளவில் தான் இருந்தது. ஒரே ஆண்டில் தங்கம் விலை ஒரு பவுன் 30000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் இதை எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 35000 என்கிற அளவில் அப்படியே ஒரு வருடத்தில் எகிறி உள்ளது.
தங்க நகையின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில வங்கி மேலாளர்கள் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்வது ஆங்காங்கே நடக்கிறது. இதற்கு சில நகை மதிப்பீட்டாளர்கள் துணை போயிருக்கிறார்கள். அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் ஒரு கனரா வங்கி கிளையில் கோடிகளில் மோசடி நடந்துள்ளது.
2.5 கோடி அளவிற்கு மோசடி
சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் துணை மேலாளர் விஜய சங்கர் மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், “கனரா வங்கியின் தங்கச்சாலை கிளையில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்யும் பணியினை மேற்கொண்டோம். அதில் குறிப்பிட்ட 21 பேருக்கு தங்க நகைகள் பெயரில் கடன் வழங்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தோம். குறிப்பிட்ட 21 வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளை அடமானமாக வாங்கி கடன் கொடுத்ததில் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. போலியான தங்க நகைகள் அடமானமாக பெறப்பட்டு சுமார் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த மோசடிக்கு வங்கியின் மேலாளராக இருந்த ரமேஷ் நல்லுகுண்டா என்பவர் மூளையாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சரவணன் உறுதுணையாக செயல்பட்டிருக்கிறார். இந்த மோசடிக்கு 21 வங்கி வாடிக்கையாளர்களும் துணையாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஏனெனில் வங்கி வாடிக்கையாளர்களின் பெயரை பயன்படுத்தி போலியான தங்க நகைகளை அடமானமாக வைத்து இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டிருப்பதை அறிந்தோம்.இதற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. நகை மதிப்பீட்டாளர் சரவணனும் பெரும் தொகையை கமிஷனாக பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கி மேலாளர் ரமேஷ் நல்லுகுண்டா பணியில் இருந்து திடீரென்று விலகி விட்டார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் முறைகேடு நடந்திருப்பதும், புகாருக்கு முகாந்திரம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். வாடிக்கையாளர் ஜானகிராமன் என்பவரும் கைதானார்.தலைமறைவான வங்கி மேலாளர் ரமேஷ் நல்லுகுண்டாவை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறினார்கள்.. அடமானம் வைக்கும் நகைகளை பாதுகாக்க வேண்டிய வங்கியின் மேலாளரே, நகை மதிப்பீட்டாளருடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது கனரா வங்கி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.