27 in Thiruvananthapuram

படிப்பு தான் முக்கியம்..இறந்த தாயைக் கூட பார்க்காமல் பரிட்சை எழுத சென்ற மகன்! கண்ணீர் மல்க கோரிக்கை!

Posted by: TV Next April 8, 2025 No Comments

தேனி: மனநலம் பாதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையிலும், தாயின் உடலை பார்க்க கூட வராமல் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன், தேர்வு எழுதி முடித்து விட்டு வந்து தாயின் உடலை மருத்துவமனையில் இருந்து அடக்கம் செய்ய பெற்று கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் இழந்து தனி ஆளாக நிற்கும் மாணவனுக்கு தொடர்ந்து மேல் கல்வி படித்து மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவும், அன்றாட வாழ்விற்கும் தமிழக அரசு உதவிட வேண்டுமென கண்ணீர் மல்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டும் தொழிலாளியான ஜெகநாதன், செல்வி தம்பதிக்கு சந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். மகன் சந்திரன் வளர்ந்து இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகநாதன் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்

இதையடுத்து கணவர் உயிரிழந்ததில் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி செல்விக்கு திடீர் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தேனியில் உள்ள செல்வியின் சகோதரி மூலம் தேனியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது பெரியம்மா மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சேர்ந்து பள்ளி படித்து வந்த சந்திரன், நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில் மனநல காப்பகத்தில் இருந்து திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வி நேற்று காலை பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாணவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், தாய் இறந்த சோகத்தில் கதறி அழுத மாணவன் மனதை திடப்படுத்தி கொண்டு இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளிக்கு சென்று எழுதி முடித்து விட்டே தாயைப் பார்க்க வந்தார்

.தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்களோடு வந்து தனது தாயின் உடலை, பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்த பின் உடலை பெற்றுக் கொண்டு உறவினர்களுடன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். பிறந்து சிறு வயதிலேயே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயும் மனநலம் பாதிக்கப்பட்டு, மிகவும் கடினமான சூழலில் படித்து வந்த மாணவன் சந்திரன், தற்போது அந்த தாயும் இல்லாமல் தனி ஆளாக நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். இந்த மாணவனுக்கு மேல்படிப்பு படித்து, நல்ல பணியில் சேர்வதற்கும், அன்றாட வாழ்விற்கும் தமிழக அரசு உதவிட வேண்டுமென மாணவனின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.