துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி டை ஆனால் என்ன நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம். ஒருநாள் போட்டிகள் டை ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தொடரை நடத்தும் அமைப்புகளும் முடிவு செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு, இந்தத் தொடரில் உள்ள போட்டிகள் டை ஆனால் தொடர்ந்து சூப்பர் ஓவர்களை நடத்த வேண்டும் என்ற விதியை வகுத்து இருக்கிறது.
அந்த வகையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி டை ஆனால், இரண்டு அணிகளும் முடிவு எட்டப்படும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர்களை விளையாடும். சூப்பர் ஓவருக்கும் தனியாக சில விதிகள் உள்ளன. ஒரு சூப்பர் ஓவர் டை ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து சூப்பர் ஓவர்கள் நடத்தப்படும். முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர்கள் நடக்கும். இதற்கு முன் 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் வேறு ஒரு சர்ச்சைக்குரிய விதி அமலில் இருந்தது. அப்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் நடத்தப்பட்ட
அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால், எந்த அணி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அத்துடன் அந்த விதி நீக்கப்பட்டு விட்டது. அப்போது முதல் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு நடத்தும் தொடர்களில் எல்லாம் தொடர்ந்து சூப்பர் ஓவர்கள் நடத்தும் முறையே அமலில் உள்ளது. அதுவே இந்த முறையும் தொடரும்.
முதல் சூப்பர் ஓவர் டை ஆனால், அதில் ஆட்டம் இழந்த பேட்ஸ்மேன்கள் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல முதல் சூப்பர் ஓவரில் பந்து வீசியவர் அடுத்த சூப்பர் ஓவரில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த போட்டி மழை பெய்தால் என்ன நடக்கும்? இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மழை பெய்தால், போட்டி நடைபெறும் அன்று இரு அணிகளுக்கும் தலா 25 ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும். அப்படி போட்டி நாள் அன்று மழை பெய்து போட்டி தடைபட்டால், மறுநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போட்டி தொடர்ந்து நடைபெறும். அதே சமயம் குறைந்தபட்சம் ஒரு அணிக்கு 25 ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். இரு அணிகளுக்கும் அந்த அவகாசம் வழங்கப்பட்டால் தான் முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ரிசர்வ் நாள் அன்றும் மழை பெய்து போட்டி நடத்த முடியாமல் போனால், இரண்டு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும். 2002 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.