சென்னை: ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே இன்றுவரை பதற்றத்தை கொடுத்துள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் இடைவெளியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்திருப்பதால், இம்முறையும் அப்படி நடக்குமோ என்ற பதற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று மதியம் நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியை நேரில் காண்பதற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 30 நிமிடங்கள் அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
இதுவரை ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2 முறைகளிலும் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஃபக்கர் ஜமான் 106 பந்துகளில் 114 ரன்களை விளாசி தள்ளினார். இந்த போட்டியில் பும்ரா வீசிய நோ-பால் இன்று வரை ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதேபோல் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடக்கவுள்ள துபாய் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் கூட்டணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல், பாகிஸ்தானை வெற்றிபெற வைத்தனர். பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி அடைந்த இந்த 2 தோல்விகளும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதும், இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை. 2021ல் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வி இந்திய அணியை லீக் சுற்றுடன் வெளியேற வைத்தது. இதனால் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதும் எளிதாக இருக்காது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி இப்படி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 2025ல் மீண்டும் ஒரு மறக்க முடியாத தோல்வியை இந்தியா சந்திக்குமா என்று இந்திய ரசிகர்கள் பலரும் தங்களின் பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.