டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரத்துக்கு மிக அருகே உள்ளது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனால் கச்சததீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் புனித அந்தோணியார் தேவாலயத்தை கட்டினர்.
புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் இணைந்து பங்கேற்பர். இந்த திருவிழாவானது பண்பாட்டு உறவு சார்ந்ததாகவும் கடந்த காலங்களில் இருந்தது. பண்டமாற்று முறை, இருநாட்டு மீனவர் குடும்பங்களிடையே திருமண உறவு வலுப்படுத்துதல் என பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் கச்சத்தீவு இணைந்ததாக இருந்தது.
ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவை, இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதனால் கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளிட்டவை பறிபோயின. 1976-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் இந்த மீன்பிடி உரிமை, வழிபாட்டு உரிமை உள்ளிட்டவை மீள நிலைநாட்டப்பட்டன. ஆனால் 1980களில் ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தால் கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் செல்வது என்பது கேள்விக்குறியானது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இல்லாமலேயே போனது.