சென்னை: அக்டோபர் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியான மலையாளப்படமான போகன்வில்லா சமீபத்தில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்ட சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு பலரும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிர்மயியை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்துக் கொண்டே அட தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நம்ம நாய் சேகர் வடிவேலுவின் அழகில் மயங்கி விழுந்தவரா இவர் இப்படி பாட்டி போல மாறிட்டாங்களே என சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர்.
பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்திருந்தாலும், படத்தில் கதையின் நாயகனே ஜோதிர்மயி தான் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாகவும் இவர் இப்படியெல்லாம் நடித்து அசத்துவாரா? என்கிற வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது
ஜோதிர்மயி, குஞ்சக்கோ போபன் இணைந்து தயாரித்த இந்த படத்தில் இருவரும் கணவன் மனைவியாக அதிலும் ஒரு ட்விஸ்ட் உடன் நடித்து மிரட்டியுள்ளனர். அதன் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
போகன்வில்லா கதை: காகிதப்பூவின் ஆங்கில பெயர் தான் Bougainvillea. படத்தில் ஜோதிர்மயி விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில், அவருக்கு பழசை எல்லாம் மறந்துவிட்டு கற்பனையான ஒரு உலகில் வாழ்வது போன்ற நோய் பாதிப்பில் இருக்கிறார். அவரது கணவராக மருத்துவராக வரும் குஞ்சக்கோ போபன் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். அந்த ஊரில் திடீரென சில இளம் பெண்கள் காணாமல் போக அவர்களின் உடல் கூட கிடைக்காத நிலையில், அந்த பெண்களை கடைசியாக சந்தித்ததே ரீத்து கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிர்மயி தான்.
போலீஸ் அதிகாரியாக வரும் பகத் ஃபாசில் ஜோதிர்மயி மற்றும் அவரை சுற்றியிருப்பவர்களிடம் நடத்தும் விசாரணை மூலமாகவே கதை விரிகிறது. அந்த பெண்களுக்கு ஜோதிர்மயிக்கும் என்ன சம்பந்தம் அவர்களை இவர் என்ன செய்தார், ரியல் வில்லன் யார் என்கிற ட்விஸ்ட்டுடன் இந்த கதை அமைந்துள்ளது.