30 in Thiruvananthapuram
TV Next News > News > National > கவரைப்பேட்டை ரயில் விபத்து.. சதிவேலைதான் காரணமா? ஆக்சனில் இறங்கிய ரயில்வே.. 4 பேருக்கு பறந்த சம்மன்!

கவரைப்பேட்டை ரயில் விபத்து.. சதிவேலைதான் காரணமா? ஆக்சனில் இறங்கிய ரயில்வே.. 4 பேருக்கு பறந்த சம்மன்!

Posted by: TV Next October 22, 2024 No Comments

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் சதி வேலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்டேசன் மாஸ்டர், கொடி அசைப்பவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


மைசூர் – தர்பாங்க இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படும் நிலையில், கடந்த 11ஆம் தேதி சுமார் 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது.

சிக்னல் கோளாறு காரணமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் இருந்து சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது.

தொடர்ந்து விபத்து குறிப்பு தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். மேலும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். சுமார் 3 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனித தவறு காரணமா அல்லது தொழில்நுட்ப தவறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகளும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சிக்னல் மாறி விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது சதி வேலை காரணமா என்று கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயில் லோகோ பைலட், துணை லோகோ பைலட், கார்டு,

பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள், பான்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரிப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 40 ரயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆசராக வேண்டும் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு துறை சம்மன் அனுப்பியது.

 

40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு இல்லை எனவும், நட்டு போல்ட்டு கழற்றப்பட்டது காரணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150 கீழ் மேலும் ஒரு வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டர், சிக்னல் அலுவலர், கொடி அசைப்பவர் உள்ளிட்ட நான்கு பேர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.