விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக, மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை விருதுநகர் போலீசார் தொடர்ந்து மேற்கோண்டு வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிகுமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் திருச்சுழியை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது..
அப்போது, திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே சென்றபோது இரு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கொண்ட காளிகுமாரை திடீரென கொடூரமாக ஆயுதங்களால் தாக்கியது. இதில், ரத்த வெள்ளத்தில் காளிகுமார் சுருண்டு விழுந்தார்.. இதைப்பார்த்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே காளிகுமார் உயிர் பிரிழந்தது. எனவே, அவரது சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விசாரணையையும் மேற்கொண்டனர். அருப்புக்கோட்டை: ஆனால், அதற்குள் காளிகுமாரின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, மருத்துவமனையில் குவிந்து, கொலையாளியை கைது செய்ய கோரி முழக்கமிட்டனர்.. அத்துடன், திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீர் மறியலும் ஈடுபட்டனர். இதனால், அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, ஸ்பாட்டுக்கு விரைந்து, போராடடக்காரர்களிடம் பேச்சுவார்த்தையை துவங்கினார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், தகராறிலும் ஈடுபட்டுள்ளார். எனவே, அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அந்த இளைஞர், பெண் டிஎஸ்பிஐ தாக்க துவங்கிவிட்டார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், அந்த இளைஞரை சுற்றிவளைத்துவிட்டனர். காயத்ரி : ஆனால், அதற்குள் போராட்டக்காரர்கள் பெண் டிஎஸ்பியையும், மற்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒருசிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை இழுத்து பிடித்து தாக்கினார்கள். இதனால் அந்த இடமே பதற்றமாக காட்சியளித்தது.. இந்த கைகலப்பில் போலீசாரே அதிகம் தாக்கப்பட்டனர்.. எனினும், பெண் டிஎஸ்பிஐ மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்து, போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். இதையடுத்து, போலீஸாரை கண்டித்து போராட்டக்காரர்கள், திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிறகு, காளிகுமாரின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
கைது நடவடிக்கை: இதனிடையே, தகவலறிந்து வந்த எஸ்.பி. கண்ணன், டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, டிஎஸ்பி-யைத் தாக்கியதாக, ராமநாதபுரம் அருகேயுள்ள நெல்லிகுளம் பாலமுருகன் (43) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, பொன்குமார், காளிமுத்து, சஞ்சய்குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காளீஸ்வரன் கை முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் அவரை மீட்டு, திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அவரது கையில் மாவு கட்டு போட்டனர். அதன்பிறகு, காளீஸ்வரன் உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். பரபரப்பு: அருப்புக்கோட்டையில் பெண் எஸ்பி தாக்கப்பட்டதும், தலைமுடி பிடித்து இழுத்ததும் வீடியோவாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான நபர்களும் ஒவ்வொருவராக கைதாகி கொண்டிருப்பதால், அருப்புக்கோட்டையில் பதற்றமும், பரபரப்பும் நிலவி கொண்டே உள்ளது.