ரேபரேலி: தான் விரும்பியதை எல்லாம் பிரதமர் மோடியைப் பேச வைக்க முடியும் என்ற ராகுல் காந்தி, தேர்தல் முடிந்ததும் மோடி நிச்சயம் பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராகுல் காந்தி: இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் பேசிய ராகுல் காந்தி, தான் பேசுவதையே தான் பிரதமர் மோடி திரும்பப் பேசி வருவதாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், “நான் சொல்வதையே தான் அவர் திரும்பச் சொல்கிறார்… நான் நினைக்கும் எதை என்ன வேண்டுமானாலும் பிரதமரைப் பேச வைக்க முடியும்.
நரேந்திர மோடி நீங்கள் அதானி, அம்பானி குறித்து எங்கும் பேசவே மாட்டீர்கள் என்றேன்.. இரண்டு நாட்களில் நரேந்திர மோடி அதானி- அம்பானி குறித்துப் பேசினார்.. இப்படி தான் நான் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவோம் டக்கா டக்.. டக்கா டக்… என்று சொன்னால், மறுநாள் பிரதமர் மோடியும் ‘டக்கா டக்.. டக்கா டக்’ என்று தனது உரையில் குறிப்பிடுகிறார்.
இரண்டு நிமிடங்கள் போதும்: நீங்கள் பிரதமர் என்ன பேசவேண்டும் என்று நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லுங்கள். என்னால் இரண்டு நிமிடங்களில் அவரை அதைப் பேசவைக்க முடியும். மோடி எதுவும் பேச வேண்டாம் என்று விரும்பினால் அதையும் சொல்லுங்கள்.. அதையும் செய்துவிடலாம். மோடி தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார். ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் அவர் பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார்” என்றார்.
லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக எம்பியாக இருந்த சோனியா காந்தி, உடல்நலம் காரணமாகக் கடந்த பிப். மாதம் ராஜ்யசபாவில் இருந்து எம்பியாக தேர்வானார். இதையடுத்து ராகுல் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதி: வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது இரண்டாவது லோக்சபா தொகுதியாக அமேதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானியை எதிர்த்துப் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.. இருப்பினும், ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத வகையில் தனது தாயாரின் ரேபரேலியில் போட்டியிட முடிவு செய்தார்.. அதே நேரத்தில் அமேதியில் சோனியா காந்திக்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.
அமேதி மற்றும் ரேபரேலி என்று இந்த இரு தொகுதிகளிலும் 5ம் கட்ட வாக்குப்பதிவில் மே 20ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.