திஸ்பூர்: இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை, காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு தேசிய பூங்காவின் அஸ்ஸாம் போலீஸ் விருந்தினர் மாளிகையான கோஹோராவில் இரவு தங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை பூங்காவுக்குள் யானை சவாரி செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாகளில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. யானை சவாரியை தொடர்ந்து, ஜீப் சவாரி செய்த பிரதமர் மோடி, பூங்காவில் இயற்கையின் அழகை ரசித்து வருகிறார்.
பிரதமரின் பயண திட்டத்தின்படி, சஃபாரி முடித்து மதியம் 1:30 மணியளவில் ஜோர்ஹாட் திரும்பும் அவர், ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் ‘லச்சித் போர்புகானின்’ 84 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதில், புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைப்பது, சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் திட்டங்களும் அடங்கும்.
ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் ரூ.27000 கோடி மதிப்பில், டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று, குவாஹாத்தி சுத்திகரிப்பு ஆலை மற்றும் டிக்பாய் சுத்திகரிப்பு ஆலைகளின் விரிவாக்கத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதேபோல பாரௌனியில் இருந்து கவுகாத்தி வரை செல்லும் ரூ.3,992 கோடி மதிப்பிலான பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.