23 in Thiruvananthapuram

விஸ்வரூபம் எடுக்கும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் இப்படித்தான் இருக்கும்! ஷாக் வார்னிங்

7 months ago
TV Next
94

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.

 


பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல மார்ச் 20-22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என வானிலை தனயார் வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலில் நீர் குறையாமல் இருக்கும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, பழைய சோறு கஞ்சி, எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை அருந்தினால் நீர் குறைவுப் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply