சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ,1,368 கோடி நிதி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது என்று கடந்த சில தினங்கள் முன்னதாக அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது.
எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க் கிழமை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வங்கிய கெடு வித்திருந்தது. அதன்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு ஆவணங்களையும் எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அந்த விவரங்கள் படி நாட்டிலேயே அதிக நிதியை பாஜக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலான விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதில் ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடி வரையான மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்த நிறுவனங்கள் எவை? அதை வழங்கிய தனிநபர்களின் பெயர்கள் என்ன? அந்த நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் என்ன?, பெறப்பட்ட தொகை பற்றிய தகவல்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலின் படி தேர்தல் பத்திரங்களைக் கொடுத்து பணமாக மாற்றிய கட்சிகளின் பட்டியலில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,பாரத் ராஷ்டிரீய சமிதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, அதிமுக,மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நிதியைப் பல நிறுவனங்களிடம் இருந்து இந்தக் கட்சிகள் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ஏர்டெல், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ், வேதாந்தா, நவயுகா, ஐடிசி, பிரமல் எண்டர்பிரைசைஸ், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், பிவிஆர் சினிமாஸ், நாட்கோ பார்மா, சன் பார்மா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளன. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மாராட்டினுக்குச் சொந்தமான future gaming and hotel services private limited நிறுவனம்தான் முதலிடம் பிடித்துள்ளது. அவர் கிட்டத்தட்ட ரூ,1,368 கோடி கொட்டிக் கொடுத்துள்ளார். அதைப்போல் மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாக வழங்கி உள்ளது. Qwik supply chain pvt ltd என்ற நிறுவனம் ரூ.410 கோடியை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா ரூ. 400 கோடியையும் Haldia energy limited நிறுவனம் ரூ.377 கோடியையும் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 247 கோடியையும் நிதியாக வங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.