காந்திநகர்: குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
குஜராத்தில் நடைபெற உள்ள வைப்ரண்ட் குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் திறப்பு விழா இன்று தொடங்குகிறது. தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு அரங்கில், இன்று 10 வது வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. இதனை மாநாட்டை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குஜராத் மாநிலத்திற்கு ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவன தலைமை நிர்வாகிகள் வருகை தந்து உள்ளனர்.
அவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை சுமார் 9.30 மணிக்கு, குஜராத் தலைநகர் காந்திநகரில் அமைந்து இருக்கும் மகாத்மா மந்திர் மாநாட்டு மையம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இருக்கிறார். அதேபோன்று இதற்கு வரும், முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இன்று மதியம் 3 மணியளவில் வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் 34 நாடுகளும், 16 நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இதில் கலந்துகொள்ள பார்வையாளர்கள் 65 ஆயிரம் பேரும், 50 ஆயிரம் நிறுவனங்களும் முன்பதிவு செய்து உள்ளன. ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இதில் முக்கிய நிகழ்வாக மாலை 5.15 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி FinTech தலைமை மன்றத்தில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது நஹ்யான் நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமதுடன் சாலையில் திறந்தவெளி வாகனத்தில் மக்களை சந்தித்தபடி ஊர்வலம் சென்றனர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மக்களை சந்தித்தபடி ஊர்வலமாக சென்ற இரு நாட்டு தலைவர்களும் குஜராத் தலைநகர் காந்திநகருடன் இணைக்கும் இந்திரா பாலத்துடன் தனித்தனியாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதற்காக அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வைப்ரண்ட் குஜராத் என்ற முதலீட்டாளர் மாநாடு கடந்த 2003 ஆம் ஆண்டு அம்மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அண்மையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் குஜராத்தில் தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.