சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள 40 கட்சிகளை அழைத்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அழைப்புக் கடிதம் கொடுக்க உள்ளோம். இது தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அந்த எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026-ம் ஆண்டில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. பொதுவாக மக்கள் தொகையை கணக்கிட்டு இது மேற்கொள்ளப்படுகிறது. என்று கூறினார். இந்த அனைத்துக்கட்சி கூட்டம் வரும் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அழைப்புவிடுத்து கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிட்ஸ் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி,அகில இந்திய பார்வர்டு பிளாக்,தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக, புதிய தமிழகம் , இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி,பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, ஆம் ஆத்மி கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:- இந்தியாவின் கூட்டாட்சி முறையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், தமிழ் மக்களின் நலன் காப்பதற்கும் தேவையான பல்வேறு முயற்சிகளை நாம் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும், நிதிப் பகிர்விலும், அதிகாரப் பகிர்விலும், நம் உரிமைகளைக் காப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ள சூழலில், நம் மாநிலம் சந்திக்கக்கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு, தங்கள் கட்சி / இயக்கத்தின் ஆதரவைக் கோருவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.
தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால் தமிழகத்தின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும். இது மட்டுமின்றி, தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடிவிலும், மத்திய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமையைப் பறிப்பதாகவே அமைந்துள்ளன. இந்த கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு முறை, நமது மாநிலத்தை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தகுந்த உத்திகளை தீட்டிச் செயல்படுத்த அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.