Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
விஜய்க்கு புதிய சிக்கல்! பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம்.. பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு!
தமிழ்

விஜய்க்கு புதிய சிக்கல்! பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம்.. பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு!

September 27, 2026
0 min read

சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையக்கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அரசின் நடவடிக்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என்று கூறி தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்

.

புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருந்தது. அதில், சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக அப்பகுதி மக்கள், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் காலியாகிவிடும் என்று பயந்தனர். "ஒன்னும் பாதிப்பு வராதுனு இன்னைக்கு வாய் மொழியா சொல்லுவீங்க. ஆனா, திடீர்னு நாத்தம் அடிக்குது, மீன் எல்லாம் இங்க விக்க கூடாதுன்னு சொல்லி.. எங்களை காலி பண்ண சொல்லிடுவீங்க" என்று மீனவ மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதேபோல மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. விஜய் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், விஜய் அரசு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறது.

இப்படி இருக்கையில்தான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பட்டினப்பாக்கம் கடல்சார்ந்த மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்கு உட்பட்டதாக இருப்பதால், இங்கு புதிய தலைமை செயலகம் அமைப்பது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோர சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சூழலியல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவம், பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகம் கட்டுவது சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.