சென்னை: உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர், நம் வீட்டு சமையலறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்க்கரை ஏற்றுமதி தடை, உரத் தட்டுப்பாடு எனப் பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, "நமக்குத் தெரியாமல் ஏதேனும் பொருளாதார மந்தநிலை (Recession) வருகிறதா? மீண்டும் பழையபடி லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வந்துவிடுமா?" என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினையின் பின்னணி என்ன, இது நம்மை எப்படிப் பாதிக்கும் என்பதை மிக எளிமையாக இங்கே பார்ப்போம்.
நமது நாட்டின் அன்றாடப் பொருளாதார ஓட்டத்திற்கு மிக முக்கியமான அச்சு எதுவென்றால் அது கச்சா எண்ணெய் (Crude Oil) தான். இந்தியா தனது 88 சதவீத கச்சா எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. சமீபத்தில் மத்திய கிழக்கு பகுதியில் (மேற்கு ஆசியா) அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. இதன் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) தற்காலிகமாக மூடப்பட்டது. உலகிற்குச் செல்லும் கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் பெரும் பகுதியும் இந்த ஒற்றைப் பாதை வழியாகத்தான் வர வேண்டும். போர் காரணமாக இந்தப் பாதை முடங்கியதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயர்ந்தது.