சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக இடையில் நின்றதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. எண்ணூரிலிருந்து சென்னைக்குள் வரும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையும் இதனால் பாதிக்கப்பட்டன.
ஏற்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட இந்த ரயில், எண்ணூரில் உள்ள யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் திடீரென பழுதாகியது. இதனால், ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது. நீண்ட நேரமாக முயன்றும் ரயிலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் கும்மிடிப்பூண்டியிலிருந்து எண்ணூர், திருவொற்றியூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் புறநகர் ரயில் பாதியிலிலேயே நிறுத்தப்பட்டன. மறுபுறம், சென்னை சென்ட்ரலிலிருந்து பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை வழியாக திருவொற்றியூர், எண்ணூர், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொருக்குப்பேட்டையில் பாதியில் நின்றிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டிருக்கின்றன.
ரயில் சேவை பாதிப்பால் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சமீப காலமாக ரயில் சேவையில் சிக்கல்கள் பல எழுந்திருக்கிறது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.