29 in Thiruvananthapuram

பீகார்: நிதிஷ் ஓடிப்போனால் மீண்டும் முதல்வராகக் கூடாது..லாலு படுதீவிரம்- பாஜக அணி கட்சிகளுக்கு வலை!…

Posted by: TV Next January 27, 2024 No Comments

பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தந்தால் துணை முதல்வர் பதவி தருவதாக ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சியுடன் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமாரின் ஜேடியூ, பாஜக கூட்டணிக்கே மீண்டும் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் இணைந்து நாளை மறுநாள் நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாட்னாவில் பாஜக, ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனித்தனியே நடைபெற்றது.

இதனிடையே நிதிஷ்குமார் கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறினால் காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத் யாதவ் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போது 114 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் லாலு அணிக்கு உள்ளது.


இதனால் பாஜக கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவுடன் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் கட்சி. அவரது மகன் சந்தோஷ் மஞ்சி தற்போது தலைவராக உள்ளார். ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தந்தால் சந்தோஷ் மஞ்சிக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்பதுதான் லாலுவின் பேரமாம். அத்துடன் லோக்சபா தேர்தலிலும் சில தொகுதிகளை ஒதுக்குவதாகவும் லாலு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். லாலுவின் இந்த தீவிர முயற்சிகள் நிதிஷ்குமார் தரப்பை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறதாம்.