டெல்லி: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம்.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். அதேபோல, DM, MCh போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப் பெர்சண்டைல்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் 0 எடுத்திருந்தாலும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,000 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்தச் சூழலில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரம் இடங்களை நிரப்ப கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பூஜ்ஜியமாக நிர்ணயித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் நீட் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கட் ஆஃப் பர்சண்டைல் மதிப்பெண்ணை 0 ஆக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.